கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
UPDATED : அக் 03, 2025 02:03 PM
ADDED : அக் 03, 2025 11:06 AM

ராமநாதபுரம்: ''கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் இபிஎஸ்க்கு பாஜ கொடுத்து உள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எத்தனையோ பெருமைகளுக்கு சொந்தமானது ராமநாதபுரம் மாவட்டம். நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம். தண்ணியில்லாத காடு என கூறப்பட்ட ராமநாதபுரத்தின் நிலையை திமுக அரசு தான் மாற்றி காட்டி உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
ஏன் கசக்கிறது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது. விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்.
தமிழகம், தமிழர்கள் என்றாலே ஏன் மத்திய அரசுக்கு கசக்கிறது? தமிழகம் மீது அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் என்று நான் சொல்லி தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள்.
பள்ளி கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமரின் பெயரில் இருக்கும் மத்திய அரசு திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும். இது எல்லாம் போதாது என்று நீட், தேசிய கல்விக் கொள்கை என கல்வி வளர்ச்சிக்கும் தடை, கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிக்கும் மேலாக தொகுதி மறுவரையறை, இப்படி தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே மத்திய பாஜ அரசு வழக்கமாக செய்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தை 3 முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது எல்லாம், உடனே வராத, நிதி தராத மத்திய நிதியமைச்சர் இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.
இங்கே தான்...!
மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள். தமிழகத்தின் மீது உள்ள அக்கறை காரணம் அல்ல, இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதனை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா, என்று பார்க்கிறார்கள்.
யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழ துடிக்கிற ஒட்டுண்ணி மாதிரி தான் பாஜ இருக்கிறது.மாநில நலனை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலமே இருக்க கூடாது என நினைக்கும் மத்திய பாஜ அரசுடன் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட்டணி வைத்து கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பாஜவை அதிமுக ஆதரிப்பதற்கு கொள்கை அடிப்படை இருக்கிறதா?
அசைன்மென்ட்
தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிப்பதற்கான வாஷிங்மிஷின் தான் பாஜ. அந்த வாஷிங் மிஷினில் உத்தமர் ஆகி விடலாம் என குதித்து இருக்கிறார் பழனிசாமி. அவருக்கு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் நலன் மீது அக்கறை உள்ள யாரும் பாஜ உடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். 3வது முறையாக மக்கள் ஆதரவு குறைந்த உடன், ஒரு சிலர் ஆதரவுடன் ஆட்சி அமைத்து ஆர்எஸ்எஸ் பாதையில் பாஜ அரசு நடைபோட ஆரம்பித்து இருக்கிறது. திமுக ஆட்சி தான் அடுத்து வரும் தேர்தலிலும் வென்று தொடரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 புதிய அறிவிப்புகள்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 9 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:
* ரூ.30 கோடியில் ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும்.
* திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும்.
* கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.
* கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் ரூ.2.6 கோடியில் சிக்கல் கண்மாய் ரூ.2.3 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
* பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும்.
* கமுதியில் விவசாயிகள் நலன் கருதி ரூ.1 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
* ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றப்படும்.
⦁ ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
இந்த 9 அறிவிப்புகளுக்கு மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.