ஹமாஸ் பாணியில் டில்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்
ஹமாஸ் பாணியில் டில்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்
ADDED : நவ 18, 2025 09:56 AM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது.
டில்லி செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரியவந்தது. ஆய்வு மேலும், அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காஸிகுந்த் பகுதியை சேர்ந்த ஜஸிர் பிலால் வானி, தற்கொலைப்படை பயங்கரவாதி உமர்நபியுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உமர் நபி தாக்குதல் நடத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜஸிர் பிலால் வானி வழங்கி உள்ளார். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது.
இந்த ட்ரோன்களில் கேமரா மற்றும் பேட்டரி பொருத்தப்பட இருந்தன. நெரிசலான இடங்களில் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்த, சக்திவாய்ந்த குண்டுகள் அவற்றில் பொருத்தப்படவிருந்தன. ஆனால் இந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. சிரியா, ஈராக், இஸ்ரேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதேபோல் டில்லியில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என என்ஏஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈ.டி., சோதனை
டில்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அல்-பலாஹ் பல்கலை. அறங்காவலர்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடக்கிறது. உமர் பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலை.யின் நிதி பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். ஒயிட் காலர் பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல்-பலாஹ் பல்கலையில் காலை முதல் சோதனை நடந்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

