இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
UPDATED : ஜன 11, 2026 05:21 PM
ADDED : ஜன 11, 2026 05:18 PM

ஆமதாபாத்: இந்தியா வளர்ச்சி அடைவதற்கு சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தின் வெற்றிக் கதையை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் விவசாய உற்பத்தி புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
பால் உற்பத்தியில் நாடு முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகும். கடந்த 11 ஆண்டுகளில், மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் நாடாக மாறியுள்ளது. இன்று, உலக வல்லுநர்களும் சர்வதேச நிறுவனங்களும் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் இந்தியாவை உலக வளர்ச்சியின் இன்ஜின் என்று அழைக்கிறது.
எஸ்&பி நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தரமதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. பெரும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருகிறது. இதனால் இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா வளர்ச்சியை கண்டு வருவதற்கு சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

