ஜம்முவில் மண்ணுக்குள் புதையும் கிராமம்; போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்
ஜம்முவில் மண்ணுக்குள் புதையும் கிராமம்; போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்
ADDED : செப் 10, 2025 04:05 AM

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து வருவதால், அப்பகுதி மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில், மெந்தார் தொகுதிக்குட்பட்ட கலாபன் கிராமத்தில் திடீரென வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராமத்தை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜாவேத் அஹ்மத் ரானா பார்வையிட்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவராண உதவிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கலாபன் கிராமம் தான் என் சொந்த ஊர். சமீபத்தில் பெய்த கனமழையாலும், மலைப்பாங்கான பகுதி என்பதாலும், இங்கிருக்கும் நிலம் மெல்ல மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இதனால், மூன்று பள்ளி கட்டடங்கள், ஒரு மசூதி, மயானம் மற்றும் கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலை சேதமடைந்து உள்ளன.
ரஜோரி மற்றும் காஷ்மீரின் சில பகுதி களிலும் இதே பிரச்னை நிலவுகிறது. 25 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், 20 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.
கிராமத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நிலத்தில் புதைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடில்கள் அமைத்து தருமாறு உள்ளூர் நிர்வா கத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம்.
நிவாரண உதவி மேலும், தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளோம்.
பொதுமக்களுக்காக நிரந்தரமான குடியிருப்புகள் எங்கே அமைப்பது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கலாபன் கிராமத்தில் கட்டடங்கள் தொடர்ந்து மண்ணில் புதைந்து வருவதால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.