நாடு முழுதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி விடுவிப்பு
நாடு முழுதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி விடுவிப்பு
UPDATED : நவ 20, 2025 04:44 AM
ADDED : நவ 20, 2025 03:42 AM

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு, கோவை 'கொடிசியா' வளாகத்தில் நேற்று துவங்கியது.
இயற்கை வேளாண்மையில் தயாரிக்கப்பட்டு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக உருவாக்கி சந்தைப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை, பிரதமர் மோடி பார்வையிட்டு, விவசாயிகளிடம் உரையாடினார்.
இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஏற்படும் இடர்பாடுகள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
அதன்பின், வேளாண் மாநாட்டை துவக்கி வைத்து மோடி சிறப்புரை ஆற்றினார்.
பிரதமருக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
பருத்தித்துணியில் பாரத மாதா, பிரதமர் மோடி மற்றும் ஏர் உழவன் ஆகிய புகைப்படங்களுடன் நெசவு செய்யப்பட்ட சால்வையை, அத்திக்கடவு சுப்ரமணியம் அணிவித்து, கவுரவித்தார்.
மாநாடு நினைவாக, பிரதமருக்கு மாட்டு வண்டி சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின், வாழை நாரால் மோடியின் படம், வாழை விதைகள் தயாரிக்கப்பட்ட கூடை, கம்பர் எழுதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பி.எம்.கிஸான் சம்மான் திட்டத்தில், நான்கு மாதத்துக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை மொத்தம் 6,000 ரூபாய் விவசாயி களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அவ்வகையில், 9 கோடி விவசாயிகளுக்கு, 21வது தவணையாக, 18,000 கோடி ரூபாயை மேடையில் பிரதமர் மோடி விடுவித்தார்.
அந்த தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்குவது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஏழு விவசாயிகளுக்கு, பிரதமர் விருது வழங்கி கவுரவித்தார்.

