ரூ.2 லட்சம் லஞ்சம்: திருச்சியில் தாசில்தார் கைது: சென்னையில் பெண் விஏஓ சிக்கினார்
ரூ.2 லட்சம் லஞ்சம்: திருச்சியில் தாசில்தார் கைது: சென்னையில் பெண் விஏஓ சிக்கினார்
UPDATED : அக் 23, 2025 09:56 PM
ADDED : அக் 23, 2025 09:16 PM

திருச்சி : திருச்சி மாநகராட்சி பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட இடத்தை, மீண்டும் தங்களின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., பி.ஏ.,வான தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
தஞ்சையை சேர்ந்தவர் கோபி. இவருக்கு திருச்சி கே.கே.நகரில், 11 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை தவறுதலாக மாநகராட்சி இடம் என்று பதிவு செய்து விட்டனர். இதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கோபி விண்ணப்பித்தார்.
இதுதொடர்பாக அவர் திருச்சி ஆர்.டி.ஓ., பி.ஏ.,வான தாசில்தார் அண்ணாதுரையை அணுகினார். அவரோ, 'இடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கம்ப்யூட்டர் எஸ்.எல்.ஆரில்., பெயர் மாற்றம் செய்து தருகிறேன்' என, கூறினார். கோபி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி, மாலை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, பணத்தை அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.
ரூ.12,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., கைது
பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் மேகலாதேவி. இவர், பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம் திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, 47, ஆய்வு செய்தார். அவரும், கிராம நிர்வாக உதவியாளர் அமுதாவும், மேகலாதேவியை தொடர்பு கொண்டு, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, லஞ்சமாக 15,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின், பேரம் பேசி 3,000 ரூபாய் குறைத்து 12,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.இது குறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், மேகலாதேவி புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மேகலாதேவியிடம் இருந்து சங்கீதா, 12,000 ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்தனர்.
மானியம் விடுவிக்க லஞ்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 47; விவசாயி. இவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் மாடு வாங்கி, வேளாண் துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பத்தார். மானியம், 32,000 ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்கட்டமாக அவருக்கு, 20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண் அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கவுரிசங்கர் அக்., 15ல், வேப்பனஹள்ளி வேளாண் அலுவலகம் சென்று, உதவி வேளாண் அலுவலர் முருகேசனை சந்தித்தார். அவர், தீபாவளிக்கு பின் வருமாறு தெரிவித்துள்ளார்.
தீபாவளி முடிந்து சென்றபோது, '5,000 ரூபாய் கொடுத்தால் வங்கி கணக்கில் அடுத்த நாளே மானியம் கிடைக்கும்' என, திரும்பி அனுப்பியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத கவுரிசங்கர், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகாரளித்தார். வேப்பனஹள்ளியில் ஒரு ஓட்டலில் மாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகேசனிடம் லஞ்ச பணத்தை கவுரிசங்கர் கொடுக்க, அதை முருகேசன் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.