நாடு முழுதும் ஐ.டி.ஐ.,க்களை தரம் உயர்த்தி பயிற்சி தர..ரூ.60,000 கோடி . உடனடி வேலையை உறுதி செய்ய பிரதமர் புது அறிவிப்பு
நாடு முழுதும் ஐ.டி.ஐ.,க்களை தரம் உயர்த்தி பயிற்சி தர..ரூ.60,000 கோடி . உடனடி வேலையை உறுதி செய்ய பிரதமர் புது அறிவிப்பு
UPDATED : அக் 05, 2025 01:13 AM
ADDED : அக் 04, 2025 11:54 PM

புதுடில்லி : இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், நாடு முழுதும் உள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற் பயிற்சி மையங்களை தரம் உயர்த்தி, தொழில் துறைக்கு தேவையான ஆட்களை வழங்க, 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'பி.எம்., சேது' திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
டில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற, தொழில்துறை பயிற்சி முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, நாட்டின் இளைஞர்களுக்காக, 62,000 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். அதில், இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கம் உடைய, 'பி.எம்., சேது' திட்டமும் ஒன்று. தரம் உயர்த்தப்பட்ட ஐ.டி.ஐ.,க்கள் மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதே, பி.எம்., சேது திட்டத்தின் இலக்கு. இந்த திட்டத்துக்காக மட்டும், 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும், 1,000 அரசு ஐ.டி.ஐ.,க்களில், நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், 200 ஐ.டி.ஐ.,க்கள் மைய பயிற்சி நிலையங்களாக செயல்படும். 800 ஐ.டி.ஐ.,க்கள் அவற்றுடன் இணைக்கப்பட்ட துணை மையங்களாக செயல்படும். இங்கு உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில்துறை வேலை வாய்ப்புக்கு தேவையான திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாநிலத்தின் ஐ.டி.ஐ.,க்களும், அங்குள்ள முக்கிய தொழில்கள் அல்லது தொழிற்சாலைகளுடன் இணைந்து பணிபுரியும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் பயிற்சிகள், வெளிநாட்டிலும் பணி வாய்ப்பை பெறுவதற்கு ஏற்ப சர்வதேச திறன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கான நிதி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு படிப்படியாக வழங்கப்படும். மேலும், நாடு முழுதும் பள்ளிகளில், 1,200 தொழிற்பயிற்சி ஆய்வு கூடங்கள் அமைக்கும் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார். இதில், நவோதயா பள்ளிகளில், 400; ஏகலைவா பள்ளிகளில், 200 ஆய்வு கூடங்கள் அமைய உள்ளன. இங்கு பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் இருந்து விவசாய துறை வரை பல விதங்களில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படும்.
இவை தவிர பீஹார் மாநிலத்திற்கு பல முக்கிய திட்டங்களையும் பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றின் விபரம்:
* ஜனநாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகம் திறப்பு
* பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்குவது
* மாணவர்களுக்கு 4 லட்சம் வரை வட்டியில்லா கடன் அட்டை வினியோகம்
* பீஹார் இளைஞர்களுக்காக புதிய ஆணையம் அமைப்பு
* பாட்னா என்.ஐ.டி.,யில் புதிய வளாகம் துவக்கம்
போவ்ற திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இன்றைய நிகழ்ச்சி, நாடு திறமைக்கு அளிக்கும் முன்னுரிமைக்கான சின்னம். திறன் வளர்ந்தால் நாடு தன்னிறைவு அடையும்; வேலைவாய்ப்புகள் பெருகும்; ஏற்றுமதி உயரும். 2014க்கு முன் நாட்டில், 10,000 ஐ.டி.ஐ.,க்களே இருந்தன. கடந்த, 10 ஆண்டுகளில் மேலும் 5,000 புதிய ஐ.டி.ஐ.,க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பீஹாரின் கல்வி அமைப்பு, 25 ஆண்டுகளுக்கு முன் சிதைந்தது. அதை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீண்டும் கட்டியெழுப்பி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். மேலும், பீஹார் அமைச்சரவை, அம்மாநிலத்தில் பணிபுரியும் துணை செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை, 11,500லிருந்து 15,000 ரூபாயாகவும், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு உதவித்தொகையை, 1,800லிருந்து 3,600 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.