ADDED : நவ 25, 2026 06:16 PM

சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 47. வீரபாண்டி அருகே பாலம்பட்டி ஊராட்சியில், விஏஓவாக பணிபுரிகிறார். அங்கு உதவியாளராக, பாலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர், 53, பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், அவரது தம்பி பெயருக்கு பட்டா மாற்ற விண்ணப்பித்தார். அதற்கு, 16,000 ரூபாய் கேட்கவே, பேரம் பேசியதில், 8,000 ரூபாய் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்செல்வன், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை, தமிழ்செல்வன் மதியம், விஏஓ அலுவலகத்தில் ராஜசேகரனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், நரேந்திரன் உள்ளிட்ட போலீசார், ராஜசேகரனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, விஏஓ செல்வகுமார் அறிவுறுத்தலில் வாங்கியதாக கூறினார். இதனால் செல்வகுமாரையும், போலீசார் கைது செய்தனர்.
