ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்
ADDED : அக் 02, 2025 12:15 PM

நாக்பூர்: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது என்று, நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் விழாவில், அதன் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்-ன் 100வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாக்பூரில் நடந்த விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது; அமெரிக்கா புதிய வரிவிதிப்புகளை பிற நாடுகளுக்கு விதித்து வருகிறது. இது அந்த நாட்டின் நலனுக்கு உதவுகிறது. ஆனால், இதன் விளைவுகளை பிற நாடுகள் சந்தித்து வருகின்றன. எந்தவொரு நாடும் தனியாக வளர முடியாது.
ஒரு நாடு பரஸ்பர சார்பு அல்லது ராஜதந்திர உறவுகள் மூலம் முன்னேறும். ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அதேவேளையில், நாம் கட்டாயம் தற்சார்புடைய நாடாக இருக்க வேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகள் அவசியத்தின் காரணமாக இருக்கக் கூடாது. மாறாக அது நம்முடைய தேர்வு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது.
இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவம் கவலையளிக்கின்றன. மக்கள் நலனை புறக்கணித்தால் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அண்டை நாடுகளில் நடந்ததைப் போன்ற இடையூறுகளை உருவாக்க விரும்பும் சக்திகள் நமது நாட்டின் உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகின்றன.
தேசிய உணர்வு, கலாசாரத்தின் மீதான நம்பிக்கை தற்போதைய இளைய தலைமுறையினரிடையே அதிகம் காணப்படுகிறது. தனி நபர்கள், சமூக சேவை நிறுவனங்கள் சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்காக சுயநலமின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.