கோவில் அறங்காவலர் பதவிகளை பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆர்வம்
கோவில் அறங்காவலர் பதவிகளை பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 04, 2026 05:12 AM

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள, 200க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களின் அறங்காவலர் பதவிகளை பெற, ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதற்கட்டமாக, 214 முக்கிய கோவில்கள் மற்றும் 27 சிறப்பு நிர்வாகத் திட்ட கோவில்களில், காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அறநிலையத்துறை சமீபத்தில் வெளியிட்டது.
கோவில் அறங்காவலர் பதவி என்பது, ஆன்மிக பணி மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்தது என்பதால், ஆளும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் முதல் மாவட்ட அளவிலான வி.ஐ.பி.,க்கள் வரை பலரும், இப்பதவியை பெறுவதில் உறுதியாக உள்ளனர்.
ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள, 'ஏ கிரேடு' கோவில்களின் அறங்காவலராக நியமிக்கப்படும் போது, அது வட்டார அளவில் பெரும் அரசியல் செல்வாக்கையும், கவுரவத்தையும் தேடித் தரும் என்பதால், ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
அறநிலையத்துறை விதிமுறைகளின்படி, விண்ணப்ப படிவங்கள், 'ஆன்லைனில்' பெறப்பட்டு வந்தாலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை பெற்றுத் தர, ஆளும் கட்சித் தரப்பில் தனிப் பட்டியலே தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அறங்காவலர் குழுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய ஒரு பெண் உறுப்பினர் மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோரை, ஆளும் கட்சி நியமிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து, ஆன்மிக அன்பர்கள் கூறியதாவது: அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஆன்மிக நாட்டம் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அரசியல் ரீதியாக மட்டுமே இந்த இடங்கள் நிரப்பப்பட்டால், கோவில்களின் துாய்மையும், ஆன்மிக மாண்பும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தகுதியான மற்றும் உண்மையான பக்தர்களை மட்டுமே, அரசு தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
