உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நாளில் 800 டிரோன் ஏவி தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நாளில் 800 டிரோன் ஏவி தாக்குதல்
ADDED : செப் 07, 2025 02:03 PM

கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, நேற்று ஒரே நாளில் 800 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே மிகப்பெரிய தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ஒரு புறம் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. மறுபுறம் இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு அரசு கட்டடத்தின் கூரை எரிந்து கரும் புகை எழுந்தது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியதாவது:
உக்ரைன் மீது 805 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதுநாள் வரையிலும் நடத்திய தாக்குதலில் இது எங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ஆகும்.
ரஷ்யா, பல்வேறு வகையான 13 ஏவுகணைகளையும் ஏவியது. இந்த தாக்குதலின்போது, எங்களது படைகள், 747 ட்ரோன்களையும் 4 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியது.
உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் ஒன்பது ஏவுகணைத் தாக்குதல்களும் 56 ட்ரோன் தாக்குதல்களும் நடந்தன. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் இடிபாடுகள் 8 இடங்களில் விழுந்தன.
இதில் அரசு கட்டடம் பெரும் சேதம் அடைந்தது.
இந்த கட்டிடம் உக்ரைன் அமைச்சரவையின் தாயகமாகும், அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வந்ததால், காவல்துறையினர் கட்டிடத்திற்குள் செல்வதைத் தடுத்தனர்.
தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு யூரி இஹ்னாட் கூறினார்.