சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு அமைச்சர் பதவி விலக வேண்டும் : சபை காவலர்களுடன் எதிர்க்கட்சியினர் மோதல்
சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு அமைச்சர் பதவி விலக வேண்டும் : சபை காவலர்களுடன் எதிர்க்கட்சியினர் மோதல்
ADDED : அக் 10, 2025 12:15 AM

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நான்காவது நாளாக நேற்றும் சபரிமலை விவகாரம் எதிரொலித்ததால், கடும் அமளி ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினருக்கும், சபை காவலர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
தங்க கவசங்கள் அம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா கிலோ கணக்கில் தங்கம் வழங்கியிருந்தார்.
அதை வைத்து, கோவிலின் மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர், கருவறை கதவு மற்றும் துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க கவசங்கள் செய்து அணிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டு துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க கவசங்கள் பராமரிப்புக்காக கழற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டன.
அப்போது, கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவை கழற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், துவாரபாலகர் சிலைகளில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், சபரிமலை தங்கம் குறித்த விவகாரம், அம்மாநில அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
நான்காவது நாளாக சட்டசபை நேற்று கூடிய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள், தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பினர்.
மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட தேவசம் போர்டை கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சபரிமலையில் நடந்த இந்த முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டசபை உள்ளேயும், வெளியேயும் தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சியினர் ஒரே குரலில் முழக் கமிட்டதால், சபையில் கடும் அமளி நிலவியது. இதனால், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
வெளிநடப்பு இதனால், கடும் அமளி ஏற்பட்ட நிலையில், அவர்களை சபையில் இருந்து அப்புறப் படுத்தும்படி சபாநாயகர் ஷம்ஷீர் உத்தரவிட்டார். இதனால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும், சபை காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சபை வாசலில் அமர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால், நான்காவது நாளாக கேரள சட்டசபை முடங்கியது.