சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது
ADDED : நவ 11, 2025 06:05 PM

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் இவர் ஆவார்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதன் முடிவில் வாசுவை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை மாநில டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் வாசு ஆவார்.

