சவூதியில் முடிவுக்கு வந்தது கபாலா நடைமுறை; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இனி நிம்மதி
சவூதியில் முடிவுக்கு வந்தது கபாலா நடைமுறை; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இனி நிம்மதி
ADDED : அக் 22, 2025 09:02 AM

ரியாத்: 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கபாலா என்ற தொழிலாளர் நடைமுறையை சவூதி அரேபியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு உடல் உழைப்பை முன் வைத்து பல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்தியாவில இருந்து மட்டுமல்ல தெற்காசியாவில் இருந்தும் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியர்கள். இதை தவிர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை நாடுகளில் இருந்தும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு என கபாலா என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் ஒருமுறை தான் கபாலா. ஸ்பான்சர்ஷிப் என்பதற்கான அரபு மொழிச் சொல் தான் கபாலா.
இந்த நடைமுறை மூலம், முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தலாம். அவர்களின் விசா, பயணம், தங்கும் இடம், உணவு செலவுகள் உள்ளிட்டவற்றை ஸ்பான்சர் (கபீல் என்று அழைக்கப்படுபவர்) செய்பவர் ஏற்றுக் கொள்வார்.
தொழிலாளர்கள் தமது விருப்பப்படி சொந்த நாடு அல்லது ஊருக்கு திரும்பவோ அல்லது பணியை மாற்றவோ முடியாது. 1950ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கபாலா நடைமுறையின் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
தற்போது இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. பல வருட ஆய்வுகள், சீர்சிருத்தங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த நடைமுறையை நீக்குவதற்கான முடிவை தற்போது சவூதி அரேபியா எடுத்துள்ளது.
சவூதியில் உள்ள மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டட வேலை, வீட்டு பணியாளர், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக வந்துள்ளவர்கள். மேலும் கபாலா முறை ஒழிப்பு என்பது இளவரசர் முகமது பின் சல்மானின் தொலைநோக்கு திட்டம் 2030 என்பதின் ஒரு பகுதியாகும்.
கபாலா ஒழிப்பு மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் ஸ்பான்சர் செய்வரின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். தங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமலேயே வேலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும்.