சிவில் பிரச்னையில் அமல்படுத்தப்படாத 8.82 லட்சம் நீதிமன்ற தீர்ப்புகள்: சுப்ரீம் கோர்ட் கவலை
சிவில் பிரச்னையில் அமல்படுத்தப்படாத 8.82 லட்சம் நீதிமன்ற தீர்ப்புகள்: சுப்ரீம் கோர்ட் கவலை
ADDED : அக் 19, 2025 10:15 PM

புதுடில்லி: சிவில் பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய 8.82 லட்சம் தீர்ப்புகள் அமல்படுத்தாதற்கு சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
சிவில் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் 6 ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு தொடர்பாக ஆய்வு செய்த நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் பங்கஜ் மித்ரா ஆகியோர் கொண்ட அமர்வு கூறியதாவது: சிவில் வழக்குகள் குறித்து எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரம் அதிருப்தி அளிக்கிறது. சிவில் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை எச்சரிக்கை மணி அளிக்கிறது. தற்போதைய தேதி வரை 8,82, 579 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். மார்ச் 6 ல் துவங்கி ஆறு மாதத்தில் மட்டும் 3,38, 685 உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதனை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றால் அது அர்த்தமற்றது. நீதியை கேலிக்கூத்தாக்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அனைத்து மாநில ஐகோர்ட்களும் தங்களது வரம்பில் உள்ள மாவட்டங்களில் நிலுவையில் உள்ள இத்தகைய மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த தகவல்களை கர்நாடக உயர்நீதிமன்றம் அளிக்க தவறிவிட்டது. கடந்த ஆளு மாதங்களில் சிவில் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் முடிவு எடுக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்த பெற அளிக்க கர்நாடகா ஐகோர்ட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் நினைவூட்ட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.