தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியை சந்தித்த பள்ளி நண்பர்; ஆக்கிரமிப்பு நிலத்தை திருப்பி தந்தார் எம்.எல்.ஏ.,

பிரதமர் மோடியை சந்தித்த பள்ளி நண்பர்; ஆக்கிரமிப்பு நிலத்தை திருப்பி தந்தார் எம்.எல்.ஏ.,

பிரதமர் மோடியை சந்தித்த பள்ளி நண்பர்; ஆக்கிரமிப்பு நிலத்தை திருப்பி தந்தார் எம்.எல்.ஏ.,

18


ADDED : செப் 16, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:36 PM

18


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அவரது பள்ளி தோழர் அஸ்கர் அலி வோரா, 81, சந்தித்து பேசிய நிலையில், அவரிடம் இருந்து அபகரித்த நிலத்தை பா.ஜ., - எம்.எல்.ஏ., நரேந்திர மேத்தா திரும்ப ஒப்படைத்தார்.

குஜராத்தின் வாத்நகரில் உள்ள பி.என்.உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மிரா ரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கடந்த 1989ல், மும்பையின் பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில், 2,810 சதுர மீ., நிலத்தை அஸ்கர் அலி வாங்கினார்.

இந்த நிலத்தை யாருக்கும் அவர் விற்காத நிலையில், 2011ல் போலி ஆவணங்கள் வாயிலாக, 'சுவயம் பில்டர்ஸ்' நிறுவனம் மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., நரேந்திர மேத்தாவின், 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' நிறுவனம் அந்த நிலத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தன் நிலத்தை மீட்க 15 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் அஸ்கர் அலிக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலத்தில் பயந்தர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் துறை கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தன் பள்ளி தோழரான பிரதமர் மோடியை டில்லியில், அஸ்கர் அலி கடந்த 8ம் தேதி சந்தித்து பேசினார். அப்போது, தன் சொத்து பிரச்னை குறித்து அவரிடம் முறையிட்டார்.

இந்த விவகாரத்தில் நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அவர் குற்றஞ்சாட்டினார். போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடவும் அஸ்கர் அலி மோடியிடம் கோரினார்.

இதையடுத்து, மஹாராஷ்டிராவின் உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டனர். பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசின் முதன்மைச் செயலர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில் மும்பை மந்திராலயாவில் நேற்று முன்தினம் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், அஸ்கர் அலி, எம்.எல்.ஏ., நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி கமிஷனர் ராதா பினோத் சர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமையை கைவிடுவதாகவும், அங்கே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பெற்ற அனுமதியை திருப்பித் தருவதாகவும் நரேந்திர மேத்தா அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்தார். போலீசாருக்கு வழங்கிய கடிதத்தில், அஸ்கர் அலி மீதான புகாரை திரும்பப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பினர் இடையே சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, 15 ஆண்டுகளாக நீடித்து வந்த சொத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us