சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
UPDATED : டிச 26, 2025 02:38 PM
ADDED : டிச 26, 2025 12:20 PM

சென்னை: திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் திமுக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், டிசம்பர் 26ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி பதாகைகளை ஏந்தியபடி, முழக்கமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

