கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா
கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா
UPDATED : டிச 18, 2025 07:10 PM
ADDED : டிச 18, 2025 06:23 PM

பெங்களூரு: கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தை உளவு பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அந்த கருவி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
.
கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. இதன் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா, நேற்று (டிச.,17) பறக்க முடியாத நிலையில் பிடிபட்டது.
கடல் புற பிடிபட்ட இடத்துக்கு மிக அருகே, ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் இருப்பதால் அதிகாரிகள் உஷாராகினர். இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
வனத்துறையின் கடல்சார் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 'அதன் முதுகில் இருக்கும் ஜிபிஎஸ் கருவி, கடல் புறாவின் இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் கருவி' என்று கண்டறியப்பட்டது.
அந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்த இ-மெயில் முகவரி, சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தது. இந்த பறவை, 10,000 கி.மீ. தூரம் பயணித்து கர்நாடக கடற்கரைக்கு வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜி.பி.எஸ்., சாதனத்தில் உளவு கேமராக்கள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான மென்பொருள்கள் உள்ளதா என்பதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்த கடல் புறா வனத்துறையினரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் நவம்பர் 2024ல் கார்வாரில் நடந்தது. ஜி.பிஎஸ்., பொருத்தப்பட்ட ஒரு கழுகு பிடிபட்டது; ஆய்வில், அது பறவைகளின் இடம் பெயர்வு குறித்த ஆராய்ச்சிக்காக பொருத்தப்பட்ட கருவி என்று உறுதி செய்யப்பட்டது.

