ADDED : அக் 17, 2025 01:01 AM

பாட்னா:பீஹார் சட்டசபை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் தொகுதி பங்கீடே முடிவுக்கு வரவில்லை.
இது தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ் உடன், தொலைபேசியில் நேற்று ராகுல் பேசினார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், கடந்த 10ல் வேட்புமனு தாக்கல் துவங்கியது.
ஆளும் பா.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகி வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடக்கும் நிலையில், எதிர்க்கட்சியான காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உடன், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சி எம்.பி., ராகுல் ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.
அப்போது, கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை அளிப்பது அவசியம் என, லாலு பிரசாத் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத போதும், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தொகுதி பங்கீடை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி உள்ளது.