ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு குளறுபடி: வி.எச்.பி., கேள்வி
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு குளறுபடி: வி.எச்.பி., கேள்வி
ADDED : அக் 01, 2026 03:28 AM

சென்னை: 'ஸ்ரீவில்லிபுத்துார் தாயார் ஆண்டாள் கோவிலில், வேற்று மத அடையாளத்தோடு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கியது கண்டனத்திற்குரியது' என, வி.எச்.பி., திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்கள் அமைப்பின், தென் பாரத அமைப்பாளர் பாலு சரவணகார்த்திக் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், பெரிய பெருமாள் ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் சன்னதி உள்ளது. இங்கு வேற்று மத அடையாளங்களுடன், 'புர்கா' அணிந்து நேற்று காலை ஒரு பெண் வந்தார்.
கோவில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், எவ்வித ஒப்புதலும் பெறாமல், அவரை உள்ளே அனுமதித்தது, சட்டத்திற்கு புறம்பானதாகும்.
சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பேருந்து நிலையம் அருகே, மசூதி ஒன்றின் வெளியில், அசம்பாவிதம் விளைவிக்கும் வகையில், பகிரங்க மிரட்டல் விடுத்த நபர்கள் மீது, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இச்சம்பவம் நடந்திருப்பது பெரும் பாதுகாப்பு குளறுபடியாகும். ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வழிபட வந்தால், தேவஸ்தான அலுவலகம் சென்று, 'நான் ஹிந்து தெய்வங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்' எனக்கூறி அனுமதி பெற வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறை கோவில் நிர்வாகத்தாலும், காவல்துறையாலும் சரி வர பின்பற்றப்படவில்லை. இச்சம்பவம் குறித்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், கோவில் தேவஸ்தான நிர்வாகமும், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
