பார்லிமென்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி; வங்கதேசத்தில் நீடிக்கும் பதட்டம்
பார்லிமென்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி; வங்கதேசத்தில் நீடிக்கும் பதட்டம்
UPDATED : டிச 20, 2025 06:59 PM
ADDED : டிச 20, 2025 06:53 PM

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பார்லிமென்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பதட்டம் நீடிக்கிறது. ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், வங்கதேசமே கலவர பூமியாக காட்சியளித்து வருகிறது.
அதேபோல் முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பார்லிமென்ட் வளாகம் உள்பட டாக்காவின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இதனால், பல இடங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். பல பகுதிகள் இன்னும் பதட்டமாகவே உள்ளன.
இதனிடையே, கொல்லப்பட்ட ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று இறுதி மரியாதை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிலையில், பார்லிமென்ட் வளாகம் முன்பு குவிந்து வரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

