UPDATED : அக் 11, 2025 09:19 PM
ADDED : அக் 11, 2025 07:35 PM

சென்னை: எவரோடும் கூட்டு கிடையாது. இந்த நிலத்திலேயே மிக பெரிய கட்சி நாம் தமிழர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சென்னையில் பன்னாட்டு தமிழ் கிருத்துவ பேராயம் மற்றும் சமூக நீதி பேரவை நடத்திய உரையாடல் அமர்வில் அவர் பேசினார். அப்போது சீமான் பேசியதாவது;
ஈரோடு கிழக்கிலே இன்றைக்கு சொல்கிற என் தம்பி கூட, தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்கிறார். ஆனால் விக்கிரவாண்டியிலும், ஈரோடு கிழக்கிலும் இவர்கள் யாருமே நிற்கவில்லை. அங்கு உண்மையிலே போட்டி நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவுக்கும் தான் போட்டி.
இங்கு போட்டி என்பது கூட்டத்தை வைத்தோ, கட்சியை வைத்தோ அல்ல. கருத்தியல் புரட்சி, கருத்தியல் மோதல்… கருத்தியல் போர். இந்தியமா, திராவிடமா, தமிழ் தேசியமா என கருத்தியல் போர் நடக்கிறது.
அந்த போட்டியில் இங்கே ரெண்டே போட்டிதான். ஒன்று திராவிடரா? தமிழரா? திராவிடமா? தமிழ் தேசியமா? தமிழகத்திற்குள் இந்த இரண்டு கருத்தியல் போட்டி தான். ஈவெரா தான் எல்லாம் என்று ஒரு பக்கம், எங்கள் இனத்தின் ஒவ்வொருவரும் ஈவெரா என்று சொல்பவர்கள் மறுபக்கம்.
ஊழல் லஞ்சம், உண்மை நேர்மை என்ற கோட்பாடு தான். மும்மொழி கொள்கை அவர்களுக்கு, இருமொழிக் கொள்கை இவருக்கு. ஆனால் எனக்கு ஒரே மொழி… அது தாய்மொழி தமிழ்மொழி… அதுதான் இங்கு போட்டி. அதனால் இங்கு கருத்தியல் புரட்சியை, கருத்தியல் போரை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு கூட்டமல்ல, கொள்கை கூட்டமல்ல அரசியல். உயர்ந்த நோக்கமும், கொள்கையும் கோட்பாடுகள் தான். அரசியலுக்கு வருபவர்களை அரசியல் என்றால் என்ன என்று சொல்ல சொல்ல வேண்டும். அரசியல் என்பது ஒரு வாழ்வியல். அறிவியல், புவியியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் போல அரசியல் ஒரு வாழ்வியல்.
அரசியல் என்பது முழுக்க, முழுக்க மக்களுக்கான சேவை. அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துவது அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு. அரசியல் என்பது எல்லாருக்குமான தேவையும், சேவையும் என்பது எங்கள் கோட்பாடு.
நாம் தமிழர் கட்சி எல்லா மக்களுக்கும், அரசியல் எல்லா உயிர்களுக்கும். தலைமை அதிகாரம் எப்போதும் தமிழருக்கே. இதிலே பாஜவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று வேறு வருகிறது. வைப்பதாக இருந்தால்… இந்த 15 ஆண்டுகளாக எவ்வளவு அழுத்தம், எவ்வளவு நெருக்கடி வைத்திருக்க மாட்டேனா? என்ற கேள்வி வருகிறது.
அரை விழுக்காடு, கால் விழுக்காடு வைத்திருப்பவர்களோடு அவர்கள் (பாஜ) பேசும் போது எட்டரை விழுக்காடு, 36 லட்சத்து 50 ஆயிரம் மகனை பேசியிருப்பார்களா? பேசி இருக்க மாட்டார்களா?
2029 தேர்தலிலும் தனித்து நிற்போம். ஏன் தனித்து நிற்போம், தனித்துவத்தோடு நிற்போம். நீ வலிமை உள்ளவனாக ஆக வேண்டுமா? தனித்து நின்று போராடு. பிறர் தோள் மீது ஏறி நின்று நீ உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டு. நாங்கள் ஆக பெரும் தத்துவத்தை தந்த தலைவனின் மக்கள்.
20 நாடுகள் எதிர்த்து போர் புரிந்த போதும், துணிந்து நின்று போராடி விடுதலைக்காக நின்ற மறவர்களின் பிள்ளைகள். தோல்வியை கண்டு துவண்டுபோகும் பிள்ளைகள் அல்ல. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கக்கூடிய பிள்ளைகள் நாங்கள்.
எங்களுக்கு ரெண்டும் ஒன்றுதான்.அதனால் எந்த காலத்திலும் தேர்தல் உடன்பாடு கிடையாது. அதை ஒவ்வொரு தடவையும், நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள், நான் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
அதனால் இனிமேல் இறைமகன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டு கிடையாது. அவர் இவரோடு போய்விடுவரா? இவரோடு போய் சேருவாரா? என்று குழப்பிக் கொண்டு இருக்கக்கூடாது. இந்த நிலத்திலேயே மிக பெரிய கட்சி நாம் தமிழர்.
234 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர். அப்போது எது பெரியது? நாம் தமிழர் கட்சி தான் பெரியது. 8 கோடி மக்களோடு தேர்தல் உடன்பாடு, கொள்கை உடன்பாடு வைத்து நிற்கும் கட்சி நாம் தமிழர்.
நாங்கள் மக்களுக்கானவர்கள், மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்தவர்கள். அதனால் மக்களோடு தான் உடன்பாடு. எங்கள் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் விதைக்கிறோம். அதை மதிப்புமிக்க வாக்காக அறுவடை செய்து வலிமையாக அரசியலாக வளர்கிறோம்.
எனக்கு பாதுகாப்பு கொடு, இசட், ஒய் என்று கேட்பது கிடையாது. எங்களுக்கு பாதுகாப்பு என் மக்கள்.என் மக்களுக்கு பாதுகாப்பு அவர்கள் பிள்ளைகள் நாங்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.