UPDATED : அக் 31, 2025 06:24 PM
ADDED : அக் 31, 2025 05:38 PM

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ' பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்' என இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். 10 நாள் கெடுவும் விதித்திருந்தார்.
 இதனையடுத்து அவரது கட்சி பதவிகளை இபிஎஸ் பறித்தார்.  நேற்று நடந்த பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில், ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலர் தினகரன்,  சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார். முன்னதாக, ஓபிஎஸ் உடன் திறந்த வேனிலும் ஊர்வலமாக சென்றார்.
செய்தியாளரின் கேள்விக்கு, 'என்னை கட்சியை விட்டு நீக்கினால் சந்தோஷம்' என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கழகத்தில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்  கட்டுப்பாட்டை மீறி  நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
நாளை பேட்டி
இது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் கூறுகையில், '' நாளை( நவ.,01) காலை  11 மணிக்கு இது குறித்து விரிவாக  பேசுகிறேன்,'' எனத் தெரிவித்தார்.
தொடர் வெற்றி
1972 ல் எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன், 1977 ல் முதல்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு,1980 முதல் 2021 வரை கோபி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். ஜெயலலிதா  அமைச்சரவையில் முக்கிய இடம்பெற்றிருந்தார். அவரது பிரசார திட்டமிடலை வகுத்து கொடுத்தார்.  இபிஎஸ் முதல்வராக இருந்த போது  பள்ளிகல்வித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

