பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது
UPDATED : டிச 05, 2025 09:31 PM
ADDED : டிச 05, 2025 08:00 PM

விருத்தாசலம்: பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விருத்தாசலம் வருவாய்த்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திருமுட்டம் தாலுகாவை சேர்ந்தவர் நேரு. இவரின் மாமனார் நாகராஜனுக்கு சொந்தமான 8.50 சென்ட் நிலத்திற்கான பட்டா பக்கத்து நிலத்து உரிமையாளர் பெயரில் தவறாக இருந்துள்ளது. இதனை சரி செய்ய விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் ராஜ்குமார் என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நேரு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் ஆலோசனைப்படி ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை நேரு கொடுத்தார். தாலுகா அலுவலக வாயிலில் லஞ்சப்பணத்தை வாங்கிய ராஜ்குமாரை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

