வேலையாட்களுக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு; அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரின் தாராள மனசு
வேலையாட்களுக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு; அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரின் தாராள மனசு
ADDED : செப் 05, 2025 06:19 AM

கோவை: “நம்மள நல்லா பாத்துக்கறவங்கள, நாமும் நல்லா பாத்துக்கணும் தானே” என, தாராள மனசுடன் சிரிக்கிறார், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
ஒரு கல்வியாளராகவே பலருக்கும் அவரைத் தெரியும். ஆனால், பெரும் கொடையாளரும் கூட என்பது, அவரின் சமீபத்திய செயலால் தெரிய வந்திருக்கிறது.
தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஸ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி என நான்கு பேருக்கும், தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தலா 3 சென்ட் பரப்பில், 1,000 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடுகளை, தனது சொந்த செலவில் கட்டித் தந்திருக்கிறார்.
ஓரளவு வருமானமுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கே பெரும் கனவாக இருக்கும் சொந்த வீட்டை, தன் வீட்டில் பணிபுரிபவர்களுக்காக, அதுவும் தலா ரூ.80 லட்சத்தில் கட்டி, நிறைவேற்றித் தந்திருக்கிறார். இப்படி வீடு கட்டிக் கொடுப்பது இவருக்கு முதல் முறை அல்ல.
துணைவேந்தராக பணிபுரிவதற்கு முன், பெங்களூருவில் தங்கி பணிபுரிந்திருக்கிறார். அப்போது, தன் வீட்டில் பணி செய்த 2 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு வசித்ததே, 11 மாதங்கள்தான். சென்னையில் பணிபுரிந்தபோது, தன் வீட்டில் பணிபுரிந்தவருக்கும் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
தன் வீட்டில் பணிபுரிவர்களின் மருத்துவ செலவு, குடும்ப விசேஷங்கள், அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவு என அனைத்துக்கும் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார். சிலருக்கு திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கிறார். தற்போது, கோவையில் தனது வீட்டில் பணிபுரியும் நால்வருக்கு தனி வீடு கட்டிக் கொடுத்திருப்பதை அறிந்து அவரிடம் பேசினோம்.
'இப்ப இருக்கற பொருளாதார சூழல்ல, சம்பளம் வாங்கி காசு சேர்த்து வீடு கட்ட எல்லாராலும் முடியுமா? அவங்க சம்பளம் குடும்பத்த நடத்தவே போதுமானதா இருக்கும். இப்போதைக்கு என் வீட்டு வளாகத்திலேயே, பணியாட்களுக்கான குடியிருப்பு உள்ளது. அவர்கள் வேலையை விட்டு, ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வார்கள்.
நாம் மட்டும் சொகுசாக, மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா. நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறவர்களும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா. அவர்களும் நம் குடும்பத்தில் அங்கம்தானே. முடிஞ்ச வரைக்கும் உதவி செய்வோம் என்றே, அவர்களது பெயரிலேயே தனித்தனியாக நிலம் வாங்கி, தனி வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்' என்றார் பாலகுருசாமி.
'ஒருவருக்கு ரூ.80 லட்சம் அன்பளிப்பு என்பது பெரிய தொகை இல்லையா…' என்றோம்.
“அவங்களும் நல்லா இருக்கணுமில்ல. அவங்களால, இந்தக் காச சேத்த முடியுமா. குழந்தைங்களோட சின்ன வாடகை வீட்ல கஷ்டப்பட வேணாம்னுதான், கொஞ்சம் பெரிய வீடா கட்டிக் கொடுத்திருக்கோம். எல்லாரும் சந்தோஷமா இருப்போமே” என்றார்.தான் செய்திருப்பது பேருதவி என்ற தொனி, அவரின் பேச்சில் துளியுமில்லை. அவருக்கு திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு என்பது தெரிந்ததே. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்! எல்லாருக்கும் பணம் வாய்ப்பதில்லை; அப்படி வாய்த்த வர்கள், எல்லாருக்கும் மனம் வாய்ப்ப தில்லை!