உடல், மன ரீதியாக கடும் பாதிப்பு: ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பிய தனி ஒருவர் வேதனை
உடல், மன ரீதியாக கடும் பாதிப்பு: ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பிய தனி ஒருவர் வேதனை
ADDED : நவ 03, 2025 04:54 PM

புதுடில்லி: ஏர் இந்தியா விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்த நிலையில், நான் ஒருவன் மட்டுமே தப்பினாலும், உடல், மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன் என விஸ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் 241 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தில், பிரிட்டனை சேர்ந்த 40 வயது விஸ்வாஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார். அதே நேரத்தில் ஒரு சில இருக்கைகள் தொலைவில் இருந்த அவரது தம்பி அஜய் விபத்தில் இறந்தார்.
விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தனது முதற்கட்ட அறிக்கையில், விமானத்தின் இரண்டு இன்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் ஒரு வினாடி இடைவெளியில் துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானி அறையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஆங்கில செய்தி சேனலுக்கு, விஸ்வாஷ்குமார் ரமேஷ் அளித்த பேட்டி: நான் உயிருடன் இருப்பவர்களில் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். ஆனாலும், நான் அதை நம்பவில்லை. இது ஒரு அதிசயம். இப்போது நான் தனியாக இருக்கிறேன். நான் என் அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன், என் மனைவி, என் மகனுடன் பேசுவதில்லை. என் வீட்டில் தனியாக இருப்பது எனக்குப் பிடிக்கும்.
நான் என் சகோதரனையும் இழந்துவிட்டேன். என் சகோதரன் என் முதுகெலும்பு. கடந்த சில வருடங்களாக, அவர் எப்போதும் எனக்கு ஆதரவளித்து வருகிறார்.தனது குடும்பத்தினர் இன்னும் இந்த துயரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது தம்பி இப்போது எங்களுடன் இல்லை. இந்த விபத்துக்குப் பிறகு எனக்கும் என் குடும்பத்திற்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக, என் அம்மா தினமும் கதவின் வெளியே உட்கார்ந்து, எதுவும் பேசாமல், இருக்கிறார். நான் வேறு யாரிடமும் பேசுவதில்லை. வேறு யாருடனும் பேச எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு அதிகம் பேச முடியாது. இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன், மனதளவில் கஷ்டப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வேதனையாக இருக்கிறது.
எனது கால், தோள்பட்டை, முழங்கால் மற்றும் முதுகில் தொடர்ந்து வலி ஏற்படுவதால் அவதி அடைந்து வருகிறேன். என்னால் எந்த வேலை செய்யவோ அல்லது வாகனம் ஓட்டவோ முடியாது. நான் நடப்பதற்கு சிரமப்படும் போது, என் மனைவி உதவுகிறாள். இவ்வாறு விஸ்வாஷ்குமார் ரமேஷ் கூறினார்.

