மாணவிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் ஹெச்.எம்., கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் ஹெச்.எம்., கைது
UPDATED : மார் 04, 2026 04:06 PM
ADDED : மார் 04, 2026 04:22 AM

தேனி: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகரன், 51; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, உரிகம் அரசு பள்ளியில் தலைமையாசிரியர். பிப்., 27ல், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவியின் உடையை பிடித்து இழுத்து, முகத்தை துடைத்துள்ளார்.
மேலும், மாணவியின் அருகில் அமர்ந்து, தவறான தொடுதலில் ஈடுபட்டு முத்தம் கொடுத்ததாக, அம்மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.
பள்ளி மாணவ - மாணவியரின் பெற்றோர், '1098' என்ற குழந்தைகள் அவசர கால உதவி எண்ணிற்கு புகார் செய்துள்ளனர். அதன்படி, குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்ததில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து, சுதாகரனை போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
இவர், ஏற்கனவே அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இரு மாதங்களுக்கு முன் தான், இப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

