சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி
சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி
ADDED : செப் 27, 2025 05:08 AM

பிரயாக்ராஜ் : சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தெரிவித்த வழக்கில், சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்துக்கு கடந்த ஆண்டு சென்ற காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
கண்டனம்
அப்போது அவர், 'இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா; 'கடா' எனப்படும், காப்பு அணிய அனுமதிக்கப்படுவாரா; குருத்வாரா செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்காக போராட்டம் நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்' எனப் பேசினார்.
இது சர்ச்சையை ஏற் படுத்திய நிலையில், பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
வாரணாசியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், கடந்தாண்டு நவம்பரில், நாகேஷ்வர் மிஸ்ரா என்பவர் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கடந்த ஜூலை 21ல், விசாரணைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், கடந்த 3ல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், ராகுலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.