தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
ADDED : அக் 13, 2025 09:37 AM

சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.92,200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து, இதுவரை இல்லாத வகையில் ரூ.92 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக்., 11) தங்கம் ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று (அக்.,12) ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை.
இந்த நிலையில், இன்று (அக்.,13) தங்கம் விலை மீண்டும் ரூ.200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தங்கத்தைப் போல வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.195க்கும், கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.