ADDED : அக் 03, 2025 01:09 PM

தூத்துக்குடி: ''நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜ பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புக்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: கரூர் சம்பவத்தை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேவைக்காக பேசுகிறது. போன உயிர் போனது தான், அதை பற்றி பேசி என்ன செய்வது, இனி வரும் காலங்களில் கவனமாக செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரம் உள்ள நாடு இல்லை. கருத்து சுதந்திரம் உள்ளதாக ஒப்புதலுக்காக சொல்கின்றனர்.
வழக்கு சிறை என்று அடக்கு முறையை வைத்து ஒடுக்கும் முறை ஜனநாயக நாட்டில் சரியில்லை.
எங்களுக்கென்று வியூகம் கிடையாது. மக்களோடு மக்களுக்காக நிற்போம். எல்லா தொகுதிகளும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜ பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புக்கின்றனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய ஓட்டுக்களை திமுக மொத்தமாக அறுவடை செய்கிறது. திமுக ஏமாற்றி வேலை செய்கிறது, இதனை நம்புகின்றனர்.
ஆர்எஸ்எஸ், திமுக இரண்டிற்கும் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இந்த தேர்தலில் பாஜ இல்லை. திமுக, அதிமுக என்று தான் இருக்கும். பாஜ இன்னொரு கட்சியின் முதுகுக்கு பின்னால் தான் இருக்கிறது. இந்தத் தேர்தலில் இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்களை திமுக எளிதாக பெற முடியாது. இது ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் கூட்ட நெரிசலில் சிக்கி செத்துவிட்டது. நீ தான் காரணம், நீ தான் காரணம் என்று கரூர் சம்பவத்தை பட்டிமன்றம் போல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
கரூர் சம்பவத்தில் தொலைக்காட்சிகளுக்கு பெரிய பங்கு உண்டு. திரையரங்கில் முதல் காட்சி பார்க்கக் கூடிய கூட்டம் இப்போது தெருவுக்கு வரும்போது வருகிறது. இரண்டு கட்சிகளும் பணம் வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விடும். அந்த கட்சிகளுடன் தான் கூட்டணிக்கு போக அனைவரும் விரும்புவார்கள். எப்படியாவது இழுத்து கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று செய்கின்றனர். என்னுடன் பெரும்பாலும் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.