தென் ஆப்ரிக்கா நிதான ஆட்டம்; முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்
தென் ஆப்ரிக்கா நிதான ஆட்டம்; முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்
ADDED : நவ 22, 2025 06:11 PM

கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அசாமின் கவுகாத்தி பர்சாபரா மைதானத்தில் இன்று துவங்கியது.
கில் கழுத்து வலி காரணமாக விலகிய நிலையில், இந்தப் போட்டியில் ரிஷப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார். இதன்மூலம், இந்திய அணியின் 38வது டெஸ்ட் கேப்டனானார். கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சனும், அக்ஷர் படேலுக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்க்ரம், ரிக்கெல்டன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 82 ரன்னாக இருந்த போது, மார்க்ரம் (38) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு, ரிக்கெல்டன் (35), ஸ்டப்ஸ் (49), பவுமா (41) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பை கொடுத்தனர். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்துள்ளது. சேனுரன் முத்துசாமி (25),கயில் (1) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

