தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மறுபடியும் தட்சிண பிரதேசம்

 மறுபடியும் தட்சிண பிரதேசம்

 மறுபடியும் தட்சிண பிரதேசம்


UPDATED : ஏப் 05, 2026 10:04 PM

ADDED : ஏப் 05, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2026 10:04 PM ADDED : ஏப் 05, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டின் பெயரை 'தட்சிண பிரதேசம்' என்று மாற்றுவதற்கு கூட தயங்க மாட்டார்கள், என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக, தமிழகம் எனும் வார்த்தையை அப்போதைய கவர்னர் ரவி பயன்படுத்தியபோது எழுந்த சர்ச்சைக்கு பின்னர், இப்போது மாநிலத்தின் பெயரை வைத்து இன்னொரு அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி இருக்கிறது.

தட்சிண பிரதேசம், 70 ஆண்டுகளுக்கு முந்தைய சர்ச்சை.

நேரு பிரதமராக இருந்தபோது இந்தியாவின் மாகாணங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பது என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது. மாநிலங்களை எதன் அடிப்படையில் பிரிப்பது, எல்லைக்கோடு எதுவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஆராய தார் கமிஷன், ஜே.வி.பி.கமிட்டி, பஸல் அலி கமிஷன் என ஏகப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

மொழிவாரி மாநிலங்கள், சுதந்திர இந்தியாவுக்கு சரிவராது என்பதை தான், அத்தனை கமிஷன்களும் அறிக்கையாக கொடுத்தன. அதனால், தட்சிண, உத்தர, கிழக்கு, மேற்கு, மத்திய ராஜ்ஜியங்கள் என ஐந்து பெரும் மாநிலங்கள் அமையவிருப்பதாக பிரதமர் நேரு அறிவித்தார்.

இன்றைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளடக்கிய மதராஸ் மாகாணம்; இன்றைய கேரள மாநிலமான திருவிதாங்கூர் -கொச்சின் சமஸ்தானம்; மைசூர் ராஜ்ஜியம்; பம்பாய் மாகாணம் மற்றும் ஹைதராபாத் ராஜ்ஜியங்களின் கன்னட பெரும்பான்மை பகுதிகள் ஆகியவை அடங்கியது தான் தட்சிண பிரதேசம்.

தட்சிண பிரதேசம் உருவானால் தென்னகத்தின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும், மொழி ரீதியாக பிரச்னை வராது என்று நினைத்தனர். மதராஸ்பட்டினம் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பனிப்போரையும் தவிர்க்க உதவும் என்று நினைத்தனர்.

ஈ.வெ.ரா., மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு எதிராகவே இருந்தார். அவர், ஒன்றுபட்ட தென்னிந்தியா உருவாக வேண்டும் என்று நினைத்தார். பாகிஸ்தான் கோரிக்கையை ஜின்னா முன்வைத்தபோது, ஈ.வெ.ரா., திராவிடஸ்தான் / திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஈ.வெ.ரா.,வின் குரல் எடுபடவில்லை .

காங்கிரஸ் கட்சியில் நிறைய பேருக்கு பதவி தரவேண்டும் என்பதற்காகவே, டில்லி சர்க்கார் மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரிப்பதாகவும் ஈ.வெ.ரா., குறிப்பிட்டார். இந்நிலையில் நேருவின் தட்சிண பிரதேச அறிவிப்பு, ஈ.வெ.ரா.,வை வாயடைக்க வைத்தது. அதற்கு, மேலும் ஒரு காரணம், ராஜாஜியும் அவரது சிஷ்யர்களான சி.சுப்ரமணியன், பக்தவத்சலம் உள்ளிட்டோர். அவர்களும் தட்சிண பிரதேசம் உருவாவதில் தீவிரமாக இருந்தனர்.

தட்சிண பிரதேச அறிவிப்புக்கு எதிராக தென்னிந்தியாவில் எதிர்ப்பு அலையே எழுந்தது. தமிழ்நாட்டில் இடதுசாரிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும்; கேரளத்தின் அச்சுதமேனன், ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்த்தனர். மதராஸ் மாகாணத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்தது.

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த யாருமில்லாத நிலையில்தான் ம.பொ.சி., களத்தில் இறங்கினார். சென்னை மாகாணத்தை சேர்ந்த பல கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டார். அதே நேரத்தில், தட்சிண பிரதேசத்திற்கு ஆதரவு தேடி, ராஜாஜியின் சிஷ்யர்கள் பெங்களூரில் முகாமிட்டனர். தட்சிண பிரதேசத்தின் அமைப்பு, எல்லை பற்றியெல்லாம் முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கூடினர். அதில் காமராஜரும் கலந்து கொண்டார்.

கடந்த 1956 ஜனவரி 27 அன்று ஜீவா, பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், மா.பொ.சி., டி.கே.சண்முகம், பி.டி.ராஜன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் என ஏகப்பட்ட பேர் மதராஸ்பட்டினத்தில் கூடினர். தட்சிண பிரதேசத்தை நிராகரித்து மொழிவழி மாநிலம் அமைப்பது; மதராஸ் மாகாணத்திற்கு, தமிழ்நாடு என்று பெயரிடுவது; காமராஜர் அரசை இதற்காக வலியுறுத்துவது என்று முடிவு செய்தனர். இதற்காக, தமிழகம் முழுதும் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு செய்வதென்றும், மதராஸ்பட்டினத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இதில், ஈ.வெ.ரா., கலந்துகொள்ள வேண்டும் என்றனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அவசரப்படாமல் இருந்தால், காமராஜரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பது ஈ.வெ.ரா., வின் நம்பிக்கை. 'மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்துவிட்டாலே போதும். அதை காமராஜர் செய்துவிடுவார். முதல்வராக காமராஜர் இருக்கும்போது எதற்கு கவலைப்பட வேண்டும்' என்றார் ஈ.வெ.ரா.,

அதே ஆண்டு பிப்ரவரி 19 மாலை 4 மணிக்கு, இன்றைய சென்னையின் தீவுத்திடலில் ஆரம்பித்த ஊர்வலம், திருவல்லிக்கேணி வழியாக மவுன்ட் ரோடை நோக்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி பிரயோகத்தில் இறங்கியது காவல் துறை. காமராஜர் அரசை கண்டித்து கோஷமிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது தடியடி நடந்தது. மூத்த தலைவர் ஜீவா மயங்கி விழுந்தார்.

மறுநாள், சென்னை நகரமெங்கும் போஸ்டர்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுக்கெதிராக தட்சிண பிரதேசத்திற்கு துணைநிற்கும் காமராஜரின் ஆட்சியை எதிர்த்து தி.மு.க.,வினர் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற்றதாக போஸ்டர்களில் சொல்லப்பட்டு இருந்தது. ம.பொ.சி., மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முயற்சியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 'கண்ணீர்த்துளி இயக்கத்தினர்' (தி.மு.க.,வுக்கு ஈ.வெ.ரா., வைத்த பெயர்), போராட்டத்தை தங்களுடைய வெற்றியாக காட்டிக் கொண்டதை ஈ.வெ.ரா., கண்டித்தார்.

அடுத்து வந்த ஒரே வாரத்தில், தட்சிண பிரதேச யோசனையை நேரு அரசு வாபஸ் வாங்கிக் கொண்டது. ஈ.வெ.ரா.,வே சொன்னாலும் தமிழ்நாடு என பெயர் வைக்க முடியாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். எதிர்க்கட்சிகள் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சென்னை மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க., தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

தேங்க்ஸ் டு தட்சிண பிரதேசம்!

ஜெ.ராம்கி-



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us