இந்தியர்களால் எழுச்சி பெறும் இலங்கை சுற்றுலாத்துறை: 7 நாட்களில் 37,000 பேர் வருகை
இந்தியர்களால் எழுச்சி பெறும் இலங்கை சுற்றுலாத்துறை: 7 நாட்களில் 37,000 பேர் வருகை
ADDED : செப் 09, 2025 11:00 AM

கொழும்பு: இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
உலகில் சுற்றுலாவை மட்டுமே பிரதான வருவாயாக கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையானது இலங்கை. சுற்றுலாப்பயணிகள் மூலமே கணிசமான அந்நியச் செலாவணியை அந்த நாடு ஈட்டி வருகிறது.
சில ஆண்டுக்கு முன் அந்நாட்டில் அரசியல், பொருளாதார சூழல் மோசமானதால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது. தற்போது ஸ்திரமான ஆட்சி ஏற்பட்ட சூழலில், நிலைமை மாறி வருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக இலங்கையின் சுற்றுலாத்துறை எழுச்சி கண்டிருக்கிறது. குறிப்பாக ஓராண்டு காலத்தில் மட்டும் 16 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இவர்களில் அதிக சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் இருந்து மட்டும் 3 லட்சத்து 35 ஆயிரம் பேரும், பிரிட்டனில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேரும் இந்தாண்டில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டுமே மொத்தம் 37, 495 சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர்.
இந்தாண்டு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற இலக்கை நோக்கி இலங்கை சுற்றுலாத் துறை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட சந்தைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் குளிர்கால விடுமுறையை கொண்டாட இலங்கையானது உலகளவில் பிரசாரம் மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற வழிமுறையை பயன்படுத்த வேண்டும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.