ADDED : ஜூன் 08, 2026 06:12 PM

கிருஷ்ணகிரி: “த.வெ.க., அரசு, மூன்று மாதங்கள் கூட, தாங்குமா என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கக் கூடாது,” என்று இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கெலமங்கலம் பகுதியில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, 1,027 வீடுகள் கட்டி குடியிருப்பது தெரிந்தது. இவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை அகற்ற முயற்சிப்பதை கண்டித்து, இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின், வீரபாண்டியன் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் தான் இதுவரை, இ.கம்யூ., உள்ளது; அக்கூட்டணியில் தான் வெற்றி பெற்றோம். தமிழக உரிமைகளில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., என, ஜனநாயக சக்திகள் சேர்ந்து போராடும்.
மீண்டும் தேர்தல் வரக்கூடாது; கவர்னர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக, த.வெ.க., அரசை, நாங்கள் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் மூத்த தலைவர். அவர், 'த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா' என கூறியிருக்க கூடாது.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பல கட்சிகள் இல்லாத சூழ்நிலையில், அக்கூட்டணி இல்லை என்ற நிலைமை உருவாகிறது. ஒரு கூட்டணியில் இருந்து விலகுவதை, முறைப்படி தான் அறிவிக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் தொடர்கிறோமா என்பதை, போகிற போக்கில் கூறி விட முடியாது. நாளை 9ம் தேதி செயற்குழு மற்றும் 10, 11ம் தேதி நிர்வாகக்குழு நடக்கிறது.அந்த கூட்டங்களில் ஆலோசித்து, எங்கள் முடிவை அறிவிப்போம். தி.மு.க., கூட்டணி வாயிலாக, எம்.பி.,யாக வெற்றி பெற்றவர்கள், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
