ADDED : ஆக 11, 2026 10:02 PM

ப.வேலுார்: விவசாயியிடம் 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கெங்காதரன், 47, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் கெங்காதரன், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். நல்லுார் அருகே நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த சவுமியாராஜ், 30; விவசாயி. அவரது பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சில தினங்களுக்கு முன், சவுமியாராஜை அழைத்த எஸ்.ஐ., கெங்காதரன், வழக்கை சாதகமாக முடிக்க, 30,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சவுமியாராஜ், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்படி, இன்று( ஆக.,11) மாலை நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, ரசாயன பவுடர் தடவிய பணத்தை, கெங்காதரனிடம் சவுமியாராஜ் வழங்கினார். மறைந்திருந்த போலீசார், கெங்காதரனை கைது செய்தனர்.
