ரயில் வழித்தடத்தின் கீழ் சுரங்கப்பாதை; 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை
ரயில் வழித்தடத்தின் கீழ் சுரங்கப்பாதை; 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை
ADDED : ஆக 28, 2026 02:20 AM

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில், ரயில் வழித்தடத்தின் கீழ் பாதசாரிகள் செல்வதற்கான சுரங்கப் பாதையை எட்டு மணி நேரத்தில் உருவாக்கி, ரயில்வே அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள வஸ்திராபூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால், ரயில் நிலையம் அருகில் உள்ள இருப்புப் பாதையை கடக்க முடியாமல்இ அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
அப்பகுதியில், நிரந்தர சுரங்கப்பாதை ஒன்று அமைத்து தர வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திடம் அவர்கள் கோரியிருந்தனர். இந்நிலையில், வஸ்திராபூரில் மிகவும் குறைந்த நேரத்தில் ரயில் பாதைக்கு கீழே, பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதை நேற்று முன்தினம் அமைக்கப்பட்டது.
இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின், கடந்த 25ம் தேதி இரவு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. எட்டு மணி நேரத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், 70 அடி நீளமுள்ள சுரங்கப்பாதை, ஏழு மணி நேரம் 15 நிமிடத்திலேயே முடிக்கப்பட்டது.
ஆர்.சி.சி., எனப்படும் வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் பாகங்களை கொண்டு தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சுரங்கப்பாதையை, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ரயில்வே அதிகாரிகள் நிறுவினர்.
இரவு நேரத்தில் சுரங்கப் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எட்டு மணி நேரத்திற்குள் இருப்புப் பாதைக்கு கீழே பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட, 'வீடியோ'வை ரயில்வே நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
