வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு; சொல்கிறார் திருமாவளவன்
வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : மே 09, 2026 05:59 PM

சென்னை: 'தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு அளித்துள்ளோம். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்,' என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2ல் வெற்றி பெற்றோம். அதேபோல, இடதுசாரிகள் கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. மக்கள் நலக் கூட்டணி தொடங்கியது முதல் இடதுசாரிகளும், விசிகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அரசியல் நெருக்கடி உருவாகியுள்ள சூழலில், இடதுசாரிகளும், விசிகவும் தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, இணைந்தே முடிவெடுப்போம் என்று கலந்து பேசி, அறிவிப்பு செய்திருந்தோம்.
இடதுசாரி கட்சிகள் மாநிலக் குழுவில் எடுத்த முடிவுகளை அடுத்து, விசிக கூட்டத்தில் கலந்தாய்வு செய்து, அவர்களின் ஒப்புதலோடு, முடிவை அறிவிப்பதாக சொன்னோம். நேற்று இடதுசாரி கட்சிகள் தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தார்கள். அதனடிப்படையில் இணையவழி மூலமாக விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவருக்கு இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், தவெகவுக்கு ஆதரவு கடிதத்தை வழங்கினோம்.
தமிழகத்தில் இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் ஒரு சிக்கலில் தவெக திணறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஆட்சியமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டே காரணங்கள் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிகவின் நிலைப்பாடு தடையாக இருக்கக் கூடாது என்பதற்கும், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு அளித்துள்ளோம். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.
நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான சூழலில், ஒரு முடிவை எடுப்பதற்கு, ஒரு அரசியல் கட்சி என்கிற முறையில் எங்களுக்கான சுதந்திரத்தை பயன்படுத்தி இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம். இது எந்த வகையிலும் எங்களின் உறவை பாதிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.
விஜய்யை கவர்னர் சந்திக்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் விஜய்க்கு கூடுதலான இடங்களைக் கொடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அங்கீகாரத்தை தந்து இருக்கிறார்கள். அவரை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே விசிக சார்பில் தெரிவித்து விட்டது. போதிய எண்ணிக்கை இல்லை என்று சொன்னார்கள். அதற்காக தான் இடதுசாரிகளுடன் இணைந்து ஆதரவை நல்கி இருக்கிறோம். கவர்னர் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். குதிரை பேரம் நடக்க இடம் கொடுக்கக் கூடாது. அதற்கான சூழலை உருவாக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
எனவே, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு உள்ளது. இந்த நிலையில், அவரை ஆட்சியமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகமாகும். கவர்னர் ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடாது. கவர்னரை சந்தித்த பிறகு விஜய், கட்சி தலைமையகத்திற்கு வருவதாக சொன்னார். நான் பதவியேற்பதற்கு பிறகு சந்திப்போம். இப்போது அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை, வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன், இவ்வாறு அவர் கூறினார்.
