ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி
ஓட்டுத் திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டு: சிறப்பு புலனாய்வு குழு கோரிய மனு தள்ளுபடி
ADDED : அக் 13, 2025 07:05 PM

புதுடில்லி: ஓட்டுத் திருட்டு குறித்த காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் எம்பி ராகுல், ஹரியானா, மஹாராஷ்டிரா, சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் திருடப்பட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்காக சில தொகுதிகளின் தரவுகளையும் வெளியிட்டார். மீடியாக்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இது தொடர்பான பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்து போட்டு சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியது. இது தொடர்பாக சில மாநில வாக்காளர் பட்டியல் அதிகாரிகளும் ராகுலுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அப்போது முதல் ஓட்டுத் திருட்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரோஹித் பாண்டே என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் ஓட்டுத் திருட்டு தொடர்பாக கடந்த ஆக.,7 ல் ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பொது நல மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன்,மனுதாரர் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரரின் வாதத்தை கேட்டோம். பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மனுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர் தனது கோரிக்கையை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தனர்.