ஆலோசனை வழங்கும் வக்கீல்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை அமைப்புக்கு தடை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஆலோசனை வழங்கும் வக்கீல்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை அமைப்புக்கு தடை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ADDED : அக் 31, 2025 11:54 PM

'குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர்களுக்கு விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு, மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோர் சட்ட ஆலோசனை வழங்கினர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் சம்மன் அனுப்பியது.
இதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மூத்த வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்தில் வாய்மொழியாக
முறையிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜராகும் அல்லது சட்ட ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர்களுக்கு விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பலாமா கூடாதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வு விசாரித்து, ஆகஸ்ட் 12ல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது.
அதன் விபரம்:
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை உட்பட எந்த ஒரு விசாரணை அமைப்புகளும் சம்மன் அனுப்பக் கூடாது.
உரிய காரணம் இல்லாமல் வழக்கறிஞர்களுக்கு இவ்வாறு சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். கைப்பற்றப்படும், 'டிஜிட்டல்' ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன்பாக மட்டுமே ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
-டில்லி சிறப்பு நிருபர்- .

