ADDED : ஜூன் 24, 2026 02:46 AM

மதுரை: அரசு போக்குவரத்து கழக பஸ்களின் முகப்பு பகுதிகளில் நீக்கப்பட்டிருந்த, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை, அரசு சி.என்.ஜி., எனப்படும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, பிற ஆறு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களின் முகப்பு பகுதியில், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்' என எழுதப்பட்டு இருக்கும்.
தி.மு.க., ஆட்சியில், 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தமிழ்நாடு பெயர் நீக்கம் தொடர்ந்தது. தற்போது தமிழக வெற்றிக் கழக அரசின் உத்தரவின்படி, தமிழக அரசு போக்குவரத்து சி.என்.ஜி., பஸ்களில், 'தமிழ்நாடு' என்ற வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு சி.என்.ஜி., பஸ்களில் தமிழ்நாடு என்ற வார்த்தையை சேர்க்கும்படி, அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. பிற அரசு பஸ்களிலும் தமிழ்நாடு' என்று சேர்ப்பது குறித்து இன்னும் உத்தரவு வரவில்லை என்றனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக இருந்து வரும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை மீண்டும் சேர்த்தது வரவேற்கத்தக்கது. 'அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் இதைச் சேர்க்க வேண்டும். அப்போது தான் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நம் பஸ்கள் தனி அடையாளமாக திகழும்; குழப்பம் தீரும்' என்றனர்.
