ADDED : நவ 23, 2026 05:51 AM

- நமது நிருபர் -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில், தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த, வரலாற்று ஆய்வாளர் டி.எஸ். கிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், தவறான தகவல்கள் வாதமாக குறிப்பிடப்பட்டுள்ளன. 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபத்துாணில் தீபம் ஏற்றினால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும்; வரும் ஆண்டுகளில், இதையே பின்பற்ற வேண்டும் என கேட்கும் நிலை ஏற்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், இந்த முறை மட்டுமே தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இதை முன்னுதாரணமாக பயன்படுத்தக் கூடாது என, நீதிபதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், 'திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில், 150 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படுகிறது; அதையே இப்போதும் கடைபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு சீராய்வு மனுவில் கூறி உள்ளது. ஆனால், உச்சி பிள்ளையார் கோவில் அருகில், 1994ம் ஆண்டு முதல்தான் தீபம் ஏற்றப்படுகிறது.
இது தொடர்பான வழக்குகளில், கீழ்நிலை நீதிமன்ற உத்தரவு மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளுக்கு மாறான தகவல்களை, தமிழக அரசு தன் வாதமாக, சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
