உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : அக் 07, 2025 11:42 AM

சென்னை: உற்பத்தி துறையின் லீடராக தமிழகம் மாறி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (அக் 07) சர்வதேச வணிக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம் நடத்தும் மாநாடு தான் உலக அளவில் பேசப்படுகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம். 3ல் இரண்டு பங்கு மின்னணு டூவீலர் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
புதிய தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறிந்து புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக இந்த மாநாடு திகழ்கிறது. விண்வெளி- பாதுகாப்புத் தொழில் சர்வதேச மாநாடு தமிழகத்தில் தான் முதல்முறையாக நடக்கிறது.உலக அளவில் வளரும் பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகம் அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்ததோடு, உற்பத்தி துறையின் லீடர் ஆக மாறி வருகிறது. அனைத்து விதமான வளர்ந்துவரும் தொழில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குவதன் அடையாளம் தான் இந்த மாநாடு.
தமிழகத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. எதை செய்தாலும் ஆல்ரவுண்டாக, பெஸ்ட்டாக செய்வதால்தான் இது சாத்தியம் ஆகி உள்ளது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது.பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழகம் மாறும் என்று நம்புகிறேன். உயர்தர ஜெட் இன்ஜின் பாகங்களில் இருந்து டிரோன்கள் உற்பத்தி வரை நடக்க உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.