'மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை'
'மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை'
ADDED : நவ 12, 2025 01:27 AM

மைசூரு: ''மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல மழை பெய்ததால், இம்முறை தமிழகத்திற்கு கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம்,'' என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
தமிழகம் - கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
'இங்கு அணை கட்டினால், தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஆனாலும் தன் முடிவில் உறுதியாக உள்ள கர்நாடக அரசு, 'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கூறி வருகிறது. அணை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
150 டி.எம்.சி., இந்நிலையில், மைசூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
மேகதாது அணை திட்டத்தால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இத்திட்டத்தால் அம்மாநில விவசாயிகள் நலனுக்கு தீங்கு ஏற்படாது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இம்முறை நாங்கள் கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம்.
எத்தினஹோலே திட்டத்திற்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; விதிக்கப் போவதும் இல்லை. அந்த திட்டத்தை செயல் படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.
மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளது.
தடுப்பு கம்பி வடமாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு 90 சதவீத பயிர் இழப்பு பதிவாகி உள்ளது. மாநிலம் முழுதும், 11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
வறண்ட பகுதியில் பயிர்களை விளைவித்துள்ள விவசாயிகளுக்கு தலா, 31,000 ரூபாயும்; பாசன பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தலா, 25,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
மூத்த வக்கீல் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவுக்காக, வரும் 15ம் தேதி டில்லி செல்கிறேன். ராகுலை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன்.
நேரம் கொடுத்தால் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிப்பேன். இல்லாவிட்டால் அன்று இரவே பெங்களூரு திரும்பி விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

