தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்
தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்
ADDED : அக் 17, 2025 01:05 AM

ஸ்ரீராமபுரம்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.
கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில், யாமினி பி.பார்ம் 2ம் ஆண்டு படித்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியபோதும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராமபுரத்தில் நடந்த திரவுபதி கோவில் கரக ஊர்வலத்தின்போது, யாமினி கழுத்தில், விக்னேஷ் வலுக்கட்டாயமாக மஞ்சள் கயிறை கட்டி உள்ளார். பின், அந்த கயிறை அவர் கழற்றிவிட்டார்.
இதுகுறித்து தெரிய வந்ததும், விக்னேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது யாமினி குடும்பத்தினர் புகார் செய்யவில்லை. 'இனி யாமினியின் பின்னால் செல்ல மாட்டேன்' என்று விக்னேஷ் கூறியதால், போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் யாமினியின் பின்னால் விக்னேஷ் சென்றார். தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்த ஆரம்பித்தார். யாமினி கண்டுகொள்ளவில்லை.
நேற்று காலை வழக்கம்போல கல்லுாரி சென்ற யாமினி, கல்லுாரி முடிந்ததும் மெட்ரோ ரயிலில் வந்து, மல்லேஸ்வரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், வழிமறித்து தகராறு செய்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து யாமினியின் கண்ணில் துாவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய யாமினி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடிவருகின்றனர்.