மக்களுக்கு இடையூறாக 200 மது கடைகள்; இடமாற்றம் செய்கிறது டாஸ்மாக்
மக்களுக்கு இடையூறாக 200 மது கடைகள்; இடமாற்றம் செய்கிறது டாஸ்மாக்
ADDED : செப் 18, 2026 07:18 PM

சென்னை:மக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில், 200 மது கடைகளை இடமாற்றம் செய்ய, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்ததும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்களில் இருந்து, 500 மீட்டருக்குள் இருந்த, 717 மது கடைகள் மூடப்பட்டன.
அதே சமயம், வீடுகள், பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள பல கடைகள் மூடப்படவில்லை என்றும், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அரசுக்கும் டாஸ்மாக் நிறுவனத்திற்கும் பலர் புகார் அனுப்பினர்.
இதையடுத்து, மக்களுக்கு இடையூறாக உள்ள மது கடைகளின் விபரங்களை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் கணக்கு எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், 200 மது கடைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுக்கூட உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில், பல மது கடைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மக்களிடம் வரும் புகாரின் அடிப்படையில், கடையில் ஆய்வு செய்யப்பட்டு, பிரச்னை இருப்பது உறுதியானதும், அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும். 200 கடைகளை இடமாற்ற செய்ய, புதிய இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
