டாஸ்மாக் டெண்டர்' முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை
டாஸ்மாக் டெண்டர்' முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை
ADDED : ஆக 22, 2026 08:29 PM

சென்னை: 'டாஸ்மாக்' மதுபான கொள்முதல் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார், 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
திமுக ஆட்சியில், டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் பணிகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை, 'சம்மன்' அனுப்பியது. இன்று (ஆக. 22) காலை, 10:55 மணியளவில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், அவர் ஆஜரானார். கூட்டு சதி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது, டெண்டர் விதிகளில் முறைகேடு தொடர்பாக, அவரிடம், 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
மூன்று மணி நேரத்திற்கு மேலான விசாரணைக்கு பின், வெளியே வந்த செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளேன். என் பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு சட்ட ரீதியாக நிலுவையில் உள்ளதால், பொது வெளியில் எதுவும் பேச முடியாது.
இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால், உள்நோக்கத்தோடு பதியப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பின், மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட, எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடுப்பதிலேயே அதிக முனைப்பு காட்டி வருகிறது. எத்தனை வழக்குகள் வந்தாலும், அவற்றைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
சட்டசபையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கவில்லை. தவெக அமைச்சர்கள் பதில் சொல்ல திணறி, கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி, திசை திருப்புகின்றனர்.
மின்துறையில், 18 'ஹார்டு டிஸ்க்' காணாமல் போனதாக கூறிவிட்டு, 38 கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கின்றனர். காணமால் போனது 18 என்றால், மீதமுள்ள 20 எங்கிருந்து வந்தன; இதுகுறித்து, மின் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.
மின் வாரியத்தில், 14,500 கோடி ரூபாயாக இருந்த கடன், திமுக ஆட்சியில், 930 கோடியாக குறைக்கப்பட்டது. இது, தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் உள்ளது. ஆனால், சட்டசபையில், திமுக ஆட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
தன் கையில் மூன்று கோப்புகள் இருப்பதாக, முதல்வர் கூறிய நிலையில், அவற்றை வெளியிடுங்கள் என, நாங்கள் சவால் விடுத்து, 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்னும் வெளியிடப்படவில்லை என்றால், அவர்களிடம் அப்படி எந்த கோப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
