பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜன.,6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜன.,6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ADDED : டிச 28, 2025 05:48 AM

சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்காக, மாநிலம் முழுதும் நேற்று வேலைநிறுத்த ஆயத்த கூட்டங்கள் நடத்தி, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' சார்பில், வேலைநிறுத்த ஆயத்த கூட்டம், மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது.
அக்கூட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், 'இனி பேச்சு நடத்தப் போவதில்லை. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஜனவரி 6 முதல் வேலைநிறுத்தம் உறுதி' என அறிவித்தனர். அதை மையமாக வைத்து, இக்கூட்டங்களில் மாவட்டவாரியாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில், எழிலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், இளங்கோவன் தலைமை வகித்தனர். பின், சுரேஷ் கூறியதாவது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக உள்ளன.
இவற்றில் ஒன்றை கூட, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. பேச்சு நடத்துவது, குழு அமைப்பது, ஆய்வு செய்வது என, நான்கரை ஆண்டுகளை கடத்தி விட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க., குழு அமைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். அறிவித்தபடி, ஜனவரி 6ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்க உள்ளோம். இனி அமைச்சர்களுடன் பேச்சுக்கு இடமில்லை.
தேர்தலில் எங்களது ஆதரவு வேண்டுமானால், முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓட்டுகளை, அவர் இழக்க மாட்டார் என, நம்புகிறோம். இல்லையென்றால், வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

