டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது; 'டீசல் தீரும் வரை' சென்னையை சுற்றி காண்பித்த போலீசார்
டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது; 'டீசல் தீரும் வரை' சென்னையை சுற்றி காண்பித்த போலீசார்
UPDATED : டிச 27, 2025 06:44 AM
ADDED : டிச 27, 2025 06:37 AM

சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்து, பஸ்சிலேயே சென்னையை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில், 2009 ஜூன் 1ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைந்து, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதம், டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து கேட்பு
இது தொடர்பாக, ஆய்வு செய்து தீர்வு காண, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய மூவர் குழுவை , முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இக்குழு நான்கு கூட்டங்கள் நடத்தி, ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்டது. ஆனால், தீர்வு ஏற்படவில்லை. எனவே, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், கோரிக்கையை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்தது.
கடந்த 1ம் தேதி, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். கடந்த 5ம் தேதி, சென்னை யில் பேரணி நடத்தினர். டி.பி.ஐ., எனப்படும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேற்று முற்றுகையிட்டனர். கோரிக்கை பதாகைகளை ஏந்தி, சாலையில் அமர்ந்து போராடினர்.
அவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில ஆசிரியைகள் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போலீசார், கைது செய்த ஆசிரியர்களை அரசு பஸ்களில் ஏற்றினர். அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் கிடைக்காததால், சென்னை கிண்டி, நந்தம்பாக்கம், திரு.வி.க.நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, பஸ்சில் 'டீசல் தீரும் வரை' சுற்றி வந்தனர். காலை 11:30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுடன், மாலை 5:00 மணி வரை, வாகனத்திலேயே போலீசார் சுற்றி வந்தனர்.
பரபரப்பு
கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை, மூன்று முறை சுற்றியதால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், வாகனத்தை நிறுத்தி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இறுதி யாக மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்த, தென்மாவட்டங்களில் இருந்து ரயிலில் சென்னை வந்த ஆசிரியர்களை, ரயில் நிலைய வாசலிலேயே போலீசார் கைது செய்தனர். ரயிலில் வந்த பயணியரின் மொபைல் போன்களையும் ஆய்வு செய்தனர். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

