அறிமுகம் ஆனது டெஸ்லா சைபர்கேப்: சிறப்பம்சங்கள் என்ன?
அறிமுகம் ஆனது டெஸ்லா சைபர்கேப்: சிறப்பம்சங்கள் என்ன?
ADDED : செப் 04, 2026 03:17 PM

வாஷிங்டன்:டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் காரை டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அறிமுகம் செய்துள்ளது.
சைபர்கேப் எனப்படும் இந்தக் கார் குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனது. இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவும் ஒளிபரப்பு இல்லை.
மின்சாரத்தில் இயங்கும் இந்தக் காரில் ஸ்டீயரிங் வீலோ அல்லது பெடல்களோ இல்லை. தானாகவே இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த காரில், அவசரமாக நிறுத்தும் பொத்தான்கள் உள்ளிட்ட, அதில் செல்பவர்களால் கட்டுப்படுத்தும் அமைப்புகள் உள்ளன. அதில் உள்ள அபாய விளக்குகளை பயன்படுத்தி காரை உடனடியாக நிறுத்த முடியும். அதில் யுஎஸ்பி - சி போர்ட்கள், கேமரா, கதவு பட்டன்கள் ஆகியவையும் இந்தக்காரில் உள்ளன
இருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பெட்டிகள் வைத்துக் கொள்ளலாம். கால்களை சொகுசாக வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரை, ரோபோ டாக்ஸி வாயிலாக பயனர்கள் புக் செய்து கொள்ள முடியும். கார் வந்ததும், பயனர்கள், செயலியை பயன்படுத்தி, காரின் டிக்கியை திறக்கலாம். அவர்கள் அருகில் வந்ததும் கதவு தானாக திறந்து கொள்ளும். உள்ளே தொடுதிரை உள்ளது. இருக்கை அமைப்புகளையும், வெப்பநிலையையும் பயனர்களுக்கு தேவையான வகையில் மாற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைக்கு ஆஸ்டினின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்தக் கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
