சபரிமலை தங்கம் கொள்ளை: வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது
சபரிமலை தங்கம் கொள்ளை: வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது
ADDED : ஜன 09, 2026 09:49 PM

சபரிமலை : சபரிமலையில் தங்கம் கொள்ளை போன வழக்கில், முக்கிய திருப்பமாக தந்திரி கண்டரரு ராஜீவரருவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். பின்னர் அவர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 1998ல் சபரிமலை கோவில் மூலஸ்தானம், கூரை, பக்க சுவர்கள், துவார பாலகர் சிலைகள் உள்ளிட்டவை, நன்கொடையாளர் ஒருவரால் தங்க தகடுகளால் பதிக்கப்பட்டது. கடந்த 2019-ல் துவார பாலகர் சிலையில் இருந்த தங்க தகடுகள் நிறம் மாறியதாக கூறி, தங்கம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்து சென்றனர்.
அனுமதி பெறவில்லை
அப்போது அதை தாமிர தகடு என ஆவணங்களில் பதிவு செய்தனர். இது எதுவும் வெளியே தெரியவில்லை. மீண்டும் தங்கம் பூசி அதே இடத்தில் தகடுகள் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் இதுபோன்று தங்க தகடுகளை பழுது பார்க்க சென்னைக்கு கொண்டு சென்ற போது, கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறவில்லை. இவற்றை உடனடியாக சபரிமலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மிகப்பெரிய கொள்ளை வெளிச்சத்துக்கு வந்தது. கொண்டு செல்லப்பட்ட தகடுகளை விட கொண்டுவந்து வைக்கப்பட்ட தகடுகள் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியான உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூருவில் ஒரு கோவிலில் பூசாரியாக இருந்தபோது, சபரிமலையில் கீழ் சாந்தியாகவும் பூஜாரிகளுக்கு உதவியாகவும் சபரிமலைக்கு வந்தவர். பெங்களூரு கோவிலில் கண்டரரு ராஜீவரரு தந்திரியாக உள்ளதால், இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. கீழ் சாந்தியாக வேலை பார்த்தபோது தேவசம் போர்டுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியே சென்ற உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் நன்கொடையாளர் என்ற போர்வையில் சபரிமலைக்கு வந்தார்.
புலனாய்வு
தேவசம் போர்டு அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, சபரிமலை மூலஸ்தானத்தில் உள்ள தங்கத்தை எல்லாம் புதுப்பிப்பதாக கூறி எடுத்துச் சென்று, அதில் மிகப்பெரிய கொள்ளையை அரங்கேற்றினார். கடந்த 2019ல் சன்னிதி துவாரபாலகர் சிலையில் உள்ள தங்க தகடுகளில் தங்கம் குறைந்து செம்பு தெரிவதால், அதை தங்கம் பூச கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென்று தந்திரி கண்டரரு ராஜீவரரு குறிப்பு எழுதி உள்ளார். ஆனால், அதில் 1998ல் தங்க தகடுகள் பதிக்கப்பட்டதை பற்றி குறிப்பிடவில்லை என்பதை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இந்த குறிப்பை நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு செம்பு என்று பின்னர் திருத்தி எழுதியுள்ளார்.
கடந்த 2019-ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்த போது, தெய்வத்துக்கு நிகரான சிலருக்கு இதில் தொடர்பு உண்டு என்று கூறியிருந்தார். அது யார் என்ற கேள்வி மூன்று மாதமாக நீடித்த நிலையில், தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்த வழக்கின் முதல் எதிரியான உன்னிகிருஷ்ணன் போத்திக்கும் தந்திரிக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு தந்திரி வரவழைக்கப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது சபரிமலையின் தந்திரி ராஜீவரரு அல்ல; மகேஷ் மோகனரரு தான் தந்திரியாக உள்ளார். தேவையில்லாத கருத்துக்கள் சொல்வதற்கு நான் தயார் இல்லை. ஜெயகுமார் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்

